எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் சோதனை : தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு


எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் சோதனை : தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 5:30 AM IST (Updated: 29 Nov 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்திற்கு இரேகெரூர் சென்றபோது முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள கே.ஆர்.புரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம் உள்பட 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

இடைத்தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதில் பகிரங்க பிரசாரம் மேற்கொள்ள 5 நாட்கள் தான் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டு, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று 2-வது முறையாக ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் தொகுதியில் பிரசாரம் செய்து, பா.ஜனதா வேட்பாளர் பி.சி.பட்டீலை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

முன்னதாக எடியூரப்பா ஹெலிகாப்டர் மூலம் இரேகெரூருக்கு வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய முதல்-மந்திரி எடியூரப்பாவை வரவேற்க பா.ஜனதா வேட்பாளர் பி.சி.பட்டீல், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு வந்திருந்தனர். அதோடு முதல்-மந்திரி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எடியூரப்பா ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அங்கு தயாராக காத்திருந்த தேர்தல் அதிகாரிகள் திடீரென்று ஹெலிகாப்டருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டரில் இருந்த பைகளை வெளியே எடுத்து அவற்றில் சோதனை போட்டனர்.

முதல்-மந்திரியின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின்போது எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின் இடையே முதல்-மந்திரி எடியூரப்பா எல்லாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் எவ்வளவு என்பது தான் தற்போது முக்கியம். வளர்ச்சி அடிப்படையில் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால் மக்கள் பா.ஜனதா பக்கம் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு நிலையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும். இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஏதேதோ கனவு காண்கிறார்கள். அதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. அதுபற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story