போராட்டத்துக்கு ஆதரவாக `மைக்'கில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க.-பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல்


போராட்டத்துக்கு ஆதரவாக `மைக்கில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க.-பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:45 PM GMT (Updated: 28 Nov 2019 10:33 PM GMT)

பொதுப்பணித்துறை ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து `மைக்'கில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.-பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை அரசு பொதுப் பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்கள் தங்களுக்கு 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர் நல கூட்டமைப்பின் சார்பில் சுதேசி மில் அருகில் தொடர் வேலைநிறுத்த பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நடைபெற்று வந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர். இந்த நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. பேச எழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி மைக்கில் பேச அனுமதி மறுத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், சாமிநாதன் ஆகியோர் ஊழியர்களுக்கு ஆதரவாக மறைமலை அடிகள் சாலையில திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் சேர்ந்து ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க் களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மைக்கில் பேச அனுமதி அளித்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது, ‘தேர்தல் வாக்குறுதி எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. மாறாக அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நீக்கியது; மேலும் பஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடியது. பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி மாதத்திற்கு ரூ.3,200 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதை வைத்து குடும்பத்தின் எந்த ஒரு செலவையும் பூர்த்தி செய்துவிட முடியாது. இதனால் அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தீவிரப் படுத்தி வெற்றி பெறுங்கள்’ என்றார்.

Next Story