நாளை முதல் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூல், புதுவையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க சென்றவர்கள் ஏமாற்றம்
சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றுவரும் பொதுமக்கள் குறைகூறும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் சுங்கச் சாவடிகளில் வெகுநேரம் காத்திருப்பதால் சரியான நேரத்திற்கு செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாமல் போகிறது என்பதுதான். சுங்கச் சாவடியில் சாலை பராமரிப்புக்காகவும், சாலை பயன்பாட்டுக்காகவும் வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருந்து வந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு சுங்கச் சாவடியில் கட்டண வசூலில் புதிய முறையை கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி தற்போது தானியங்கி முறையில் கட்டணத்தை வசூல் செய்யும் முறையை அமல்படுத்தியுள்ளது.
அதற்காக உயர்தொழில் நுட்பம் கொண்ட ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதில் நவீன சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். இதை வாகனங்களின் முன்பு கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும். வாகனங்கள் சுங்கச்சாவடியை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள நவீன ஸ்கேனர் கருவி ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கச் சாவடியிலுள்ள கணினிக்கு தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. வந்துள்ள வாகனம் எந்த வகையானது. அதற்கு எவ்வளவு கட்டணம? என்பதையும் தெளிவாக காட்டுகிறது. பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் நாம் செலுத்தி வைத்துள்ள பணத்தில் இருந்து அதற்கான கட்டணத்தை இது தானாகவே எடுத்துக் கொள்ளும்.
இந்த திட்டம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை. எரிபொருளும் மிச்சமாகும். பணியாளர்களின் தேவையும் குறையும். இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வங்கிகள், சுங்கச்சாவடி, பெட்ரோல் பங்க், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாங்கலாம்.
புதுச்சேரியிலுள்ள சுங்கச் சாவடிகளில் இதற்கான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. நவீன ஸ்கேனர் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னை செல்வதற்கு 3 பாஸ்டேக் கவுண்ட்டர்களும், புதுச்சேரிக்கு வருவதற்கு 3 கவுண்ட்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் இந்த பாதையில் வந்தால் தடுப்பு கட்டைகள் தானாக திறந்து வழிவிடும். பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் இந்த வழித்தடத்தில் வந்தால் 2 மடங்கு கட்டணமாக கட்டிச் செல்லவேண்டும்.
இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் புதுச்சேரி மொரட்டாண்டி சுங்கச் சாவடியிலுள்ள தேசிய நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் நேற்று பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்க கார்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் குவிந்தனர். ஆனால் அங்கு ஸ்டிக்கர்கள் வாங்குவது குறித்து அறிவிப்புகள் மட்டுமே ஒட்டப்பட்டு இருந்தது. ஸ்டிக்கர் எதுவும் எங்களிடம் வரவில்லை என தெரிவித்து விட்டனர். இதனால் அங்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story