கடலூரில், குப்பை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கடலூரில் குப்பை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கி விற்கவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சியில் பயன்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு இலவசமாக கொடுக்கவும் நகராட்சி முடிவு செய்தது. அதன்படி கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராயன்பாளையத்தில் பல லட்ச ரூபாய் செலவில் குப்பைகளை சேகரித்து தரம் பிரிப்பதற்காக மையம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளையும் இங்கு எடுத்து வர நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் தொடர்ந்து கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் குப்பைகளை கொட்டக்கூடாது, குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதாடு, குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கம்மியம்பேட்டை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் லாரி, மினிலாரி, ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி கம்மியம்பேட்டை குப்பை கிடங்கிற்கு கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து குப்பை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என்ற போதிலும் மீண்டும் மீண்டும் அதன்மீதே குப்பைகள் கொட்டப்படுவதால் அவை நிரம்பி வழிந்து அருகிலுள்ள சாலைக்கு வருகிறது. மேலும் நகராட்சி ஊழியர்கள் சிலர் சுடுகாடு செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வைக்கிறார்கள். இதனால் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு சென்று அடக்கம் செய்ய சிரமமாக உள்ளது. குப்பைகளில் இருந்து வடியும் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். அப்போது குப்பைகள் சாலையில் கொட்டப்படமாட்டாது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் குப்பைகள் கொட்டப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர் இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story