முதுகுளத்தூர் தாலுகா, கொழுந்துரை கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் வழங்கினார்


முதுகுளத்தூர் தாலுகா, கொழுந்துரை கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 28 Nov 2019 9:45 PM GMT (Updated: 28 Nov 2019 10:33 PM GMT)

முதுகுளத்தூர் தாலுகா கொழுந்துரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் தாலுகா கொழுந்துரை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதனை தொடர்ந்து கலெக்டர் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 245 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. பொதுமக்கள் நலனுக்காக அம்மா திட்ட முகாம்கள், முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் போன்றவை நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டில் முதல்கட்டமாக 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள கிராமங்களுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரித்து பொது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளும் சுற்றுப்புற தூய்மை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ப்ராங்க்ளின் கிறிஸ்டோபர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், உதவி கலெக்டர் சரவணக்கண்ணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story