சிங்கம்புணரி அருகே, வாருகால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சிங்கம்புணரி அருகே, வாருகால் ஆக்கிரமிப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2019 10:00 PM GMT (Updated: 28 Nov 2019 10:33 PM GMT)

சிங்கம்புணரி அருகே ஆ.காளாப்பூர் கிராமத்தில் வாருகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ளது ஆ.காளாப்பூர் ஊராட்சி. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உள்ள வாருகால் தூர்வாரப்படாமல் உள்ளதால். இப்பகுதியில் வரும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையிலேயே தேங்குகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சாலைகளில் செல்லும் போது பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் வாகனங்கள் சற்று விலகி செல்லும்போது, சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.

ஆ.காளாப்பூர் சாலை திண்டுக்கல், காரைக்குடி வழியே தேசிய நெடுஞ்சாலை ஆக்கப்பட்ட சாலையாகும். காரைக்குடி, தேவகோட்டை வழியாக திண்டுக்கல், கோவை, ஈரோடு செல்லும் பேருந்துகள் அதிகம் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த சிலர் சாலை அருகே உள்ள கழிவுநீர் செல்லும் வாருகாலை தூர்வாரி, சாலையில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தும் விதமாக அருகே உள்ள பள்ளத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் முறையாக சென்ற கழிவு நீர் வாருகாலை ஆக்கிரமிப்பாளர்கள் மூடியதால் தற்பொழுது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆ.காளாப்பூரில் உள்ள திண்டுக்கல், காரைக்குடி தேசிய நெடுச்சாலையில் இருபுறமும் கழிவு நீர் செல்ல வாருகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு பகுதியில் உள்ள வாருகாலை ஆக்கிரமிப்பு செய்து மூடிவிட்டனர். அதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்குகின்றன. இதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்காத வண்ணம் ஆக்கிரமிக்கப்பட்ட வாருகாலை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story