மாயனூர் கதவணைக்கு செல்லும் சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் நூதன போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
மாயனூர் கதவணைக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே சுற்றுலா மையம் மாயனூர் தான். வளர்ந்து வரும் சுற்றுலா தலமான மாயனூரில் பிரசித்தி செல்லாண்டியம்மன் கோவில், சிறுவர் பூங்கா, அம்மா பூங்கா ஆகியவை அமைந்துள்ளது. கரூர்–நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் இருவழிச்சாலை வசதியுடன் மாயனூர் கதவணை கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியூர் சுற்றுலா பயணிகள் மாயனூருக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் மாயனூர் கதவணைக்கு செல்லும் பரிசல்துறை பிரதான சாலையை முறையாக பராமரிப்பு செய்யாததால் தார்சாலை மண்சாலையாக மாறி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்லும்போது, புழுதி பறந்து குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மாயனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையால் கதவணைக்கு செல்லும் பரிசல் துறை சாலை சேறும் சகதியுமாக மாறியதுடன், குழிகளில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மாயனூர் கதவணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை மாயனூர் கதவணை பரிசல் துறை சாலையை சீரமைக்ககோரி சாலையில் தேங்கிய மழை நீரில் மீன் வலையுடன் பரிசலை இயக்கியும், தண்ணீரில் படுத்து நீச்சல் அடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இப்பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவர் இந்த குழியில் விழுந்து காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story