அந்தியூர் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


அந்தியூர் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 30 Nov 2019 3:45 AM IST (Updated: 29 Nov 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. அப்போது அங்குள்ள அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் எந்திரத்தில் இருந்த ரூ.5 லட்சம் தப்பியது.

அந்தியூர், 

அந்தியூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பிரம்மதேசம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. இதனால் அந்த மையத்தின் அருகில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். உடனே அவர்கள் ஏ.டி.எம். மையத்தை நோக்கி ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் இதுகுறித்து வங்கி மேலாளர் மற்றும் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் வங்கி மேலாளர் மற்றும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தின் ஒரு பகுதியை உடைத்து அதில் உள்ள இரும்புத்தகட்டை அகற்றி உள்ளனர். இதனால் அந்த எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் தங்களுடைய கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் திருட்டு போகாமல் தப்பியதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதால், மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story