ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் - கலெக்டர் கதிரவன் தகவல்
ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 1,141 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டு உள்ள 7 லட்சத்து 11 ஆயிரத்து 88 குடும்பங்களுக்கு ஏற்கனவே ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 20 லட்சத்து 38 ஆயிரத்து 450 பேர் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்அடைந்து வருகிறார்கள். இதில் 20 லட்சத்து 24 ஆயிரத்து 712 பேரின் ஆதார் எண் ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13 ஆயிரத்து 738 பேரின் ஆதார் எண் அந்தந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் அடங்குவார்கள்.
இதேபோல் 8 ரேஷன் கார்டுகளில் செல்போன் எண் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்பட வேண்டிய ரேஷன் அட்டைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும் அந்தந்த இ-சேவை மையங்களில் ஆதார் எண் எடுப்பதற்கு தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. எனவே விடுபட்ட ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை டிசம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுடைய ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story