துறையூர் அருகே கோர்ட்டு ஊழியர் அடித்துக்கொலை; 4 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
துறையூர் அருகே கோர்ட்டு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துறையூர்,
துறையூர் அருகே மருவத்தூரைச் சேர்ந்தவர் நடேசன் மகன் பழமலை(வயது 60). முன்னாள் ராணுவவீரர். இவருடைய மகன் வசந்த்(32). இவர் திருச்சியில் உள்ள கோர்ட்டில் ஊழியராக வேைல செய்து வந்தார். முன்னாள் ராணுவ வீரர் பழமலைக்கும், இதே ஊரில் வசிக்கும் மற்றொரு பழமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த ஊரில் முன்னாள் ராணுவவீரர் பழமலையின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நேற்று பழமலை, தனது மகன் வசந்துடன் சென்றார். அப்போது, அங்கு வந்த மற்றொரு பழமலை தரப்புக்கும், முன்னாள் ராணுவவீரர் பழமலை தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது, அதே ஊரைச்சேர்ந்த ரஞ்சித்(32), பெரியசாமி(34), பாக்கியராஜ்(32), விக்கி(25) ஆகியோர் வசந்தை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த வசந்த் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தை அடித்துக்கொலை செய்த 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story