சிவகாசியில், திருமண மண்டப சுவர் இடிந்து இடிபாடுகளில் புதைந்த பெண் பலி - 5 பெண்கள் படுகாயத்துடன் மீட்பு
சிவகாசியில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்த பெண் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மேலும் 5 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் ரோட்டில் காமராஜர் பூங்கா அருகில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணி நேற்று காலை 10 மணி அளவில் நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.
இதில் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் உள்ள தெருவில் சரிந்தது. அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த ஈசுவரி (வயது 60), ஜீவா (30), கனியம்மாள் (60), நாகம்மாள் (70), அங்கம்மாள் (73), சண்முகத்தாய் (73) ஆகிய பெண்கள் மீது இடிபாடுகள் மொத்தமாக விழுந்தது.
உடனே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து, இடிபாடுகளுக்குள் புதையுண்டு கிடந்தவர்களை மீட்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த பெண்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஈசுவரி, கனியம்மாள் உள்பட 6 பேரையும் படுகாயத்துடன் மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் கனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமண மண்டபத்தின் உணவு அருந்தும் இடத்தில் பராமரிப்பு நடந்த போது அதன் சுவர் இடிந்து, சுற்றுச்சுவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருமண மண்டப கட்டிடத்துக்கு உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் பராமரிப்பு பணிகள் நடந்து இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதற்கான ஆவணங்களை சரி பார்த்தபின்னரே வழக்குப்பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறுஅவர் கூறினார்.
Related Tags :
Next Story