நலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி,
நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், உதவிகளும் வழங்கும் வகையில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு, அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், சிலா ஆட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலிஆட்டம், மேடை நாடகம், மான் ஆட்டம், மயில் ஆட்டம், தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா, ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற பாட்டு, பஜனை பாட்டு, பக்கீர்ஷா பாட்டு ஆகிய கலைகள் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு பிரசித்தி பெற்று உள்ளன. இந்த கலைகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நலவாரியத்தில் இதுவரை 871 கலைஞர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.
ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்யாத நாட்டுப்புற கலைஞர்கள் உடனடியாக நலவாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story