தேர்தல் பணியாற்றாமல் மவுனம் காக்கிறார்; சித்தராமையா பிரசார கூட்டத்தை புறக்கணித்த நாகேந்திரா எம்.எல்.ஏ


தேர்தல் பணியாற்றாமல் மவுனம் காக்கிறார்; சித்தராமையா பிரசார கூட்டத்தை புறக்கணித்த நாகேந்திரா எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 30 Nov 2019 4:45 AM IST (Updated: 30 Nov 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா பிரசார கூட்டத்தை நாகேந்திரா எம்.எல்.ஏ. புறக்கணித்தார். அவர் தேர்தலில் பணியாற்றாமல் மவுனம் காத்து வருகிறார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் பல்லாரி மாவட்டம் விஜயநகரில் பிரசாரம் செய்தார். இதில் நாகேந்திரா எம்.எல்.ஏ. (பல்லாரி புறநகர் தொகுதி) உள்பட பல்லாரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் சித்தராமையாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நாகேந்திரா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அவர் காங்கிரஸ் சார்பில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி மவுனம் காத்து வருவதாக பல்லாரி மாவட்ட காங்கிரசார் கூறுகிறார்கள். கூட்டணி ஆட்சியில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக நாகேந்திரா எம்.எல்.ஏ. அதில் பங்கேற்கவில்லை.

இதனால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம், இடைத்தேர்தலுக்கு பிறகு அவர் காங்கிரசை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story