நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் மட்டும் ரூ.200 கோடி கைமாறியது - டி.டி.வி.தினகரன் மீது புகழேந்தி குற்றச்சாட்டு


நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் மட்டும் ரூ.200 கோடி கைமாறியது - டி.டி.வி.தினகரன் மீது புகழேந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Nov 2019 4:30 AM IST (Updated: 30 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் மட்டும் ரூ.200 கோடி வரை கைமாறியதாக டி.டி.வி. தினகரன் மீது புகழேந்தி குற்றம் சாட்டினார்.

சேலம், 

சேலத்தில் அ.ம.மு.க. முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் ஆணையத்தில் நான் ஒரு புகார் கொடுத்தேன். அதில், அ.ம.மு.க. கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய கூடாது என்று கூறி உள்ளேன். ஆனால் இதுதொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் அழைத்து விசாரிக்க வில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.

இதனால் தான் அ.ம.மு.க.வை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் இந்திய தலைமை ஆணையர், டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். அ.ம.மு.க.வில் இருந்து விலகிவிட்ட நான், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்பட 15 பேரின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளோம். இந்த வழக்கில் கோர்ட்டு என்ன உத்தரவு கொடுத்தாலும் கட்டுப்படுவோம்.

நான் தேர்தலின் போது செலவுக்கு தினகரனிடம் இருந்து பணம் கேட்டதாக கூறுகிறார்கள். நான் அவரிடம் பணம் ஏதும் கேட்டதில்லை. அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலின் போது சேலத்தில் மட்டும் ரூ.200 கோடி கைமாறி உள்ளது. ஒரே இடத்திற்கு மட்டும் ரூ.100 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக ரூ.800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை யாரிடமோ பெற்றுள்ளார். அதை வேட்பாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார் டி.டி.வி. தினகரன். இந்த பணம் குறித்த கணக்கை அவரே கூற வேண்டும். இல்லையெனில் இதுகுறித்து நான் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். இந்த பணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனை வருமான வரித்துறையினரும், போலீசாரும் பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ராசிபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் நல்லியப்பன் என்பவரிடம் ரூ.5 கோடி கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் போட்டியிடவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலையொட்டி போட்டியிட விரும்பவர்களிடம் பணம் கேட்பதாக கூறப்படுகிறது. எனவே டி.டி.வி. தினகரனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

டி.டி.வி. தினகரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் 10 ஆயிரம் வாக்குகள் கூட பெறமாட்டார். ஏதாவது ஒரு காரணத்தை காட்டி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story