மாவட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 598 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 598 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2020-21-ம் ஆண்டிற்கு சேலம் மாவட்டத்திற்கு ரூ.7 ஆயிரத்து 598 கோடியே 87 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயத்திற்கு ரூ.5 ஆயிரத்து 847 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.3 ஆயிரத்து 496 கோடி குறுகிய கால விவசாயக்கடனும், சிறு, குறு தொழிலுக்கு ரூ.913 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்டகால விவசாய கடன் வழங்க வேண்டும்.
விவசாயத்தில் இழப்புகளை ஈடு செய்வதற்காக வங்கிகள் கடன் பெறுகின்ற மற்றும் கடன்பெறாத விவசாயிகளை பயிர்க்கடன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கான கடன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை தரவேண்டும். வங்கிகள் நீண்ட கால விவசாய கடன்களும், நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கடன்களும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story