கிரு‌‌ஷ்ணகிரியில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


கிரு‌‌ஷ்ணகிரியில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2019 10:30 PM GMT (Updated: 29 Nov 2019 7:36 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. 1¾ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய தாலுகாவில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்று, ஆயிரத்து 320 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 70 ஆயிரத்து 296 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் 8 தாலுகாக்களில் 30 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 13 ஆயிரத்து 925 மனுக்கள் தகுதி உடையதாக ஏற்கப்பட்டு அவற்றிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பர்கூர், ஊத்தங்கரை, கிரு‌‌ஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 4 இடங்களில் 6,790 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 75 லட்சம் நல உதவிகள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 100 ஏரிகள், 425 குளம், குட்டைகள் ரூ.9 கோடியே 25 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர்நிலைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி தொடங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை சார்பில் 2016 முதல் 2019 வரை 52 ஆயிரத்து 317 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. முகாம்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனுக்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசீலனை செய்து தகுதி உடைய அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் தெய்வநாயகி, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் குப்புசாமி, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மாதையன், மத்திய கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் முனியப்பன், முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிரு‌‌ஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Next Story