வைகை தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் பெற அரசாணை பிறபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், வேளாண்துறை இணை இயக்குனர் கணேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, வருவாய் கோட்டாட்சியா்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் சா்மிளா மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஏற்கனவே 2018-19-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் கண்மாய் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும், சீமைக்கருவேல மரங்களும் விரைவில் அகற்றப்பட வேண்டும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரமால் உள்ள கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் டைகள் மற்றும் கழுங்குகளை சீரமைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 87 கண்மாய்களில் வைகை தண்ணீரை கொண்டு நிரப்ப அரசாணை பிறப்பிக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
இதே போல்பெரியாற்றுதண்ணீரிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கீடு கிடைக்கவில்லலை அதையும் பெற்று தர வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
பயிர்கடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை மாற்றுவது தொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்மாய், ஊருணிகள், வரத்துகால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story