மொபட் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


மொபட் இருக்கைக்கு அடியில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Nov 2019 3:30 AM IST (Updated: 30 Nov 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

மொபட் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னையை அடுத்த மாங்காடு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58). இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி நடைபெறுகிறது. கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க நேற்று பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள வங்கியில், தனது கணக்கில் இருந்து ரூ.2½ லட்சத்தை எடுத்தார்.

அந்த பணத்தை ஒரு பையில் வைத்து, அதை தனது மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். செல்லும் வழியில் கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு அங்கு டீ குடித்தார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த ரூ.2½ லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், வங்கியில் பணம் எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்ற பாஸ்கரனை, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், அவர் டீ குடிக்க கடைக்கு சென்றபோது, மொபட் இருக்கைக்கு அடியில் வைத்து இருந்த பணத்தை திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story