டிராக்டரில் ஏற்றி சென்ற இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் விவசாயி சாவு
டிராக்டரில் ஏற்றி சென்ற இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள பூவலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு கம்பிகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அந்த கம்பிகள் மீது அமர்ந்து கொண்டு ஆரம்பாக்கத்தில் இருந்து பூவலை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். டிராக்டரை பூவலை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) ஓட்டிச்சென்றார்.
ஆரம்பாக்கம் பஜாரையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் டிராக்டர் வேகமாக திரும்பும்போது டிராக்டரில் இருந்த கம்பிகள் அப்படியே சரிந்து சாலையில் விழுந்தன.
அப்போது கம்பிகளுடன் சேர்ந்து அதன் மேல் அமர்ந்து பயணம் செய்த சுப்பிரமணியும் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் மீது இரும்பு கம்பி கட்டு மொத்தமாக விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story