அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரெயிலில் சிதம்பரம் வருகை


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரெயிலில் சிதம்பரம் வருகை
x
தினத்தந்தி 29 Nov 2019 10:45 PM GMT (Updated: 29 Nov 2019 11:39 PM GMT)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரெயில் மூலம் நேற்று இரவு சிதம்பரத்திற்கு வந்தார்.

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 83-வது பட்டமளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடக்கிறது. விழாவிற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயண மூர்த்தி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிதம்பரத்துக்கு புறப்பட்டார். இரவு 8.30 மணியளவில் ரெயில் சிதம்பரத்திற்கு வந்தது. பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிரு‌‌ஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், சப்-கலெக்டர் விசுமகாஜன், தாசில்தார் ஹரிதாஸ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கார் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12.30 மணியளவில் நாகப்பட்டினம் மீன்வள கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கார் மூலம் புறப்பட்டு செல்கிறார். தமிழக கவர்னர் வருகையையொட்டி அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story