கம்மாபுரம் அருகே, அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
கம்மாபுரம் அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே கோ.மாவிடந்தல் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக சுகாதார வளாகம், கட்டிக்கொடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கிறார்கள். குடிநீர் வசதியும் இல்லாததால் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்து செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. தெரு மின்விளக்குகளும் எரிவதில்லை. இதனால் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் கிராம மக்கள் நேற்று காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கம்மாபுரம் போலீசார் விரைந்து வந்து, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story