முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சம்மன்; போலீசார் வீடு தேடி சென்று கொடுத்தனர்


முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சம்மன்; போலீசார் வீடு தேடி சென்று கொடுத்தனர்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:52 PM GMT (Updated: 29 Nov 2019 11:52 PM GMT)

தேர்தல் வேட்பு மனுவில் மோசடி தொடர்பான வழக்குகளை மறைத்த விவகாரத்தில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கோர்ட்டு அனுப்பிய சம்மனை போலீசார் அவரது வீடு தேடி சென்று கொடுத்தனர்.

மும்பை, 

மராட்டியத்தில் முந்தைய பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசில் முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் மீது கடந்த 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தேவேந்திர பட்னாவிஸ் தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில், தனக்கு எதிராக உள்ள 2 மோசடி வழக்குகள் குறித்த விவரங்களை மறைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி நாக்பூரை சேர்ந்த வக்கீல் சதீஷ் உகே என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மும்பை ஐகோர்ட்டும் அதை உறுதி செய்தது.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சதீஷ் உகே மேல்முறையீடு செய்தார். இதில், தேவேந்திர பட்னாவிஸ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்கும்படி நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தேவேந்திர பட்னாவிசுக்கு கடந்த 4-ந் தேதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நாக்பூர் சடார் போலீஸ் நிலைய போலீசார் அங்குள்ள தேவேந்திர பட்னாவிசின் வீட்டுக்கு சென்று அந்த சம்மனை வழங்கினர்.

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற அன்றே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் தற்போது நாக்பூர் தென்மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

Next Story