மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை
மராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பின்பு மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மராட்டிய வளர்ச்சி முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியானார். மேலும் 6 மந்திரிகள் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனா கட்சிக்கு என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.
வருகிற 3-ந் தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தற்போது காங்கிரஸ் கட்சி துணை முதல்-மந்திரி பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “முன்பு எங்கள் கட்சி சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. தற்போது துணை முதல்-மந்திரி பதவியை நாடுகிறது. சபாநாயகர் பதவியை தேசியவாத காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தயாராக உள்ளது” என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் ஒருவர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஒருவர் என 2 துணை முதல்-மந்திரிகள் என்ற கருத்தையும் நாங்கள் எதிர்க்கவில்லை. முதல்-மந்திரியும் அவரது துணை பிரதிநிதிகளும் அரசின் முகம், அதனால்தான் காங்கிரஸ் அந்த பதவியைத் நாடுகிறது” என்றார்.
Related Tags :
Next Story