உடன்குடி அருகே, 662 பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


உடன்குடி அருகே, 662 பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 1 Dec 2019 4:00 AM IST (Updated: 30 Nov 2019 7:34 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே 662 பயனாளிகளுக்கு ரூ.2.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

உடன்குடி, 

உடன்குடி அருகே பரமன்குறிச்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருச்செந்தூர், சாத்தான்குளம் தாலுகாக்களைச் சேர்ந்த 662 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் வருவாய் துறை சார்பில் 150 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 119 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள், கறவை மாடுகள் 52 பேருக்கு வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் சார்பில் 16 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.74 ஆயிரத்து 500 தொழிற்கடன் மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சங்கர நாராயணன், சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெயகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, 100 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ஜோதிபாசு,

அ.தி.மு.க. நகர செயலாளர்கள் வாசமுத்து (கடம்பூர்), கப்பல் ராமசாமி (கயத்தாறு), நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Next Story