நாங்குநேரி அருகே, ஓடையில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி - 20 பேர் படுகாயம்
நாங்குநேரி அருகே ஓடையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியானார். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
வள்ளியூர்,
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம், ஈசானியமங்கலம், நாவல்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலையில் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடந்த கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். அந்த வேனை இறச்சகுளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் பிரபு (23) ஓட்டினார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி-திசையன்விளை ரோட்டில் இறைப்புவாரி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேன் நிலைதடுமாறி சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வேனில் இருந்த ஈசானியமங்கலத்தைச் சேர்ந்த பாக்கியம் (வயது 80) பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வேனில் இருந்த நாவல்காட்டைச் சேர்ந்த மெர்லின் (16), சுசீலா (60), இறச்சகுளத்தைச் சேர்ந்த ஞானம் (49), பேபி (50), டிரைவர் பிரபு உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த பாக்கியத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story