சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல்; ஆளும் கூட்டணி, பா.ஜனதா இடையே போட்டி
மராட்டிய சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இதில் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் கூட்டணி சார்பில் காங்கிரசின் நானா பட்டோலேயும், பாரதீய ஜனதா சார்பில் கிஷான் கத்தோரேயும் போட்டியிடுகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பாரதீய ஜனதாவை சேர்ந்த காளிதாஸ் கோலம்கரை தற்காலிக சபாநாயகராக நியமித்து இருந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வல்சே பாட்டீல் புதிய தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நானா பட்டோலே பாரதீய ஜனதா எம்.பி.யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
பாரதீய ஜனதா சார்பில் முர்பாட் எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரே களம் இறக்கப்பட்டு உள்ளார். 2 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
நேற்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்ற நிலையில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான நானா பட்டோலே வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
Related Tags :
Next Story