ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 2 Dec 2019 3:30 AM IST (Updated: 1 Dec 2019 7:56 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

கடந்த 21-ந்தேதி இரவு 8 மணிக்கு கோவில்களில் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணிக்கு பக்தர்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் தயார் செய்யப்பட்டது. பின்னர் காலை 10.15 மணி அளவில் தலைமை பூசாரி ராஜா முதலில் குண்டம் இறங்கினார். அப்போது கோவிலை சுற்றி நின்று கொண்டு இருந்த பக்தர்கள் ‘ஓம் சக்தி, பரா சக்தி’ என்று பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அவரை தொடர்ந்து மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். சிறுவர்-சிறுமிகளும் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகிறார்கள். 

நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கம்பம் பிடுங்குதலும், 5-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டும், பின்னர் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

Next Story