மராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி


மராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 4:15 AM IST (Updated: 2 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மிரட்டி பா.ஜனதாவினர் தங்கள் கட்சியில் சேர்த்தனர். சட்டசபையில் தேர்தலில் போட்டியிட்ட அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்தனர். கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுகிறார்கள். 100 சதவீதம் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தோல்வி அடைவார்கள்.

இந்த இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், அடிப்படை உரிமையை காக்க வேண்டுமென்றால் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும். முதல்-மந்திரி தங்களின் பேச்சை கேட்கவில்லை என்று கூறி கட்சி தாவியுள்ளனர். சித்தராமையா ஆட்சியில் அதிக பயன் அடைந்தவர்களே இவ்வாறு கட்சி மாறியது வேதனைக்குரியது.

இடைத்தேர்தலில் பா.ஜனதாவினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். அது வெற்றி பெறாவிட்டால் மதம் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களை கையில் எடுத்து சமூகத்தை உடைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்க்கவில்லை.

வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. எடியூரப்பா மீதுள்ள கோபத்தை பிரதமர் மோடி மக்கள் மீது காட்டுகிறார். கலபுரகி விமான நிலைய ஓடுதளம், கர்நாடகத்திலேயே நீளமானது. இந்த விமான நிலையம் மாநில அரசின் நிதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழாவுக்கு மோடி வந்திருக்க வேண்டும். ஆனால் எடியூரப்பாவின் முகத்தை பார்க்க விரும்பாத மோடி, அந்த விழாவுக்கு வரவில்லை. கர்நாடகத்தை மோடி அலட்சியப்படுத்து கிறார். மாநில திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குவது இல்லை. நிதி ஒதுக்குவதிலும் மோடி காலதாமதப்படுத்துகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால் அதிக நிதி உதவியை பெற முடியும் என்று பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நிதி வரவில்லை. இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. வரலாற்றிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஐ தாண்டிவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுவிட்டது. இவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சட்டவிரோதமான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மத்திய அரசு மிக அவசரம் காட்டுகிறது.

மராட்டியத்தில் அதிகாலையில் ஜனாதிபதி ஆட்சியை நீக்கி, காலை 7.15 மணிக்கு புதிய அரசு அமைக்கிறார்கள். இவ்வளவு அவசர அவசரமாக செயல்பட்டு புதிய ஆட்சிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததை நான் பார்த்தது இல்லை. மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க சோனியா காந்தி விரும்பவில்லை. ஆனால் முற்போக்கு சிந்தனையாளர்கள், பிற கட்சிகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுத்ததால் கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கெடுத்துள்ளது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story