பேரணாம்பட்டு அருகே, தரமான சாலை அமைக்கக்கோரி எம்.எல்.ஏ. சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
பேரணாம்பட்டு அருகே தரமான தார்சாலை அமைக்கக்கோரி எம்.எல்.ஏ. காத்தவராயன் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
பேரணாம்பட்டு,
தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி மலைப்பாதையில் இருந்து காட்பாடி வரை மொத்தம் 49.3 கிலோ மீட்டர் தூரம் வரையில் விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 மீட்டரில் இருந்து 10 மீட்டர் வரையில் அகலப்படுத்தி விரிவாக்க பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் பாலங்கள் அகலப்படுத்தப்பட்டும், 65 புதிய பாலங்கள் மற்றும் 4 சிறுபாலங்கள் அமைக்கும் பணி என மொத்தம் 77 பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு அருகே உள்ள டி.டி.மோட்டூர் கிராமத்தில் குடியாத்தம் சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது டி.டி.மோட்டூரை சேர்ந்த கிராமமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணி தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலை ஆங்காங்கே பெயர்ந்து வருவதாகவும் கூறினர்.
இந்த நிலையில் நேற்று காலை காத்தவராயன் எம்.எல்.ஏ. டி.டி.மோட்டூர் கிராமத்தில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் மற்றும் கிராம மக்களுடன் குடியாத்தம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது காத்தவராயன் எம்.எல்.ஏ. கூறுகையில், பேரணாம்பட்டு குடியாத்தம் சாலையில் டி.டி.மோட்டூர்-மொரசப்பல்லி கிராமத்திற்கு இடையில் போடப்பட்ட தார்சாலை லோசன மழைக்கே பெயர்ந்து வந்துள்ளது. தரமான தார்ச்சாலை போடாததால் மக்களை திரட்டி மறியலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனால் பேரணாம்பட்டு - குடியாத்தம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுப்பட்ட காத்தவராயன் எம்.எல்.ஏ. மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வேலூர் கோட்ட தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் பழனிச்சாமி கூறுகையில், காத்தவராயன் எம்.எல்.ஏ. கூறியது போன்று டி.டி.மோட்டூர் பகுதியில் தரமில்லாத சாலை அமைக்கவில்லை. பத்தலப்பல்லி மலைப்பாதையில் தொடங்கி காட்பாடி வரையில் இருபுறமும் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் டி.டி.மோட்டூர் பகுதியில், ஒரு இடத்தில் தார்ச்சாலை அமைக்கும் போது மழை பெய்ததால் தார்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இன்னொரு பகுதியில் சாலை அமைக்க முடியவில்லை. இதனால் சாலையின் ஓரத்தில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. முழுமையாக சாலை போட்டு முடிக்க வேண்டியுள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story