குழந்தைக்கு பால் வாங்க சென்ற போது பரிதாபம்: தனியார் கல்லூரி பஸ் மோதி வெல்டர் பலி


குழந்தைக்கு பால் வாங்க சென்ற போது பரிதாபம்: தனியார் கல்லூரி பஸ் மோதி வெல்டர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:13 PM GMT)

குழந்தைக்கு கடையில் பால் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பஸ் மோதியதில் வெல்டர் பரிதாபமாக இறந்தார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தங்கவேல் (வயது 29). வெல்டர். இவருக்கு திருமணமாகி பவித்திரா என்ற மனைவியும், சா‌ஷினி (வயது 1) என்ற குழந்தையும் உள்ளது. வெல்டிங் தொழில் தெரிந்ததால் திருநெல்வேலியில் தங்கி இருந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு அவர் வந்திருந்தார். நேற்று மதியம் குழந்தை சாஷினி அழுது கொண்டே இருந்ததால், பால் வாங்க கடைவீதிக்கு சென்றார்.

வெல்டர் பலி

இதையடுத்து தங்கவேல் கடையில் பால் வாங்கி கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அணவயல் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, புதுக்கோட்டையில் இருந்து கைகாட்டி நோக்கி சென்ற ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் தங்கவேல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பசியால் அழுத குழந்தைக்கு பால் வாங்க சென்ற தந்தை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த தங்கவேல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, அணவயல் பஸ் நிறுத்தம், அருகில் திருமண மண்டபம் உள்ளது. அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக் கிறது. இதனால் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் வேகத்தடை அமைக்காததால் தற்போது தங்கவேல் பலியாகிவிட்டார். இனிமேலும் விபத்துகள் நடப்பதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story