கழிவுநீர் ஓடையாக மாறிய நடைபாதை


கழிவுநீர் ஓடையாக மாறிய நடைபாதை
x
தினத்தந்தி 2 Dec 2019 4:00 AM IST (Updated: 2 Dec 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அருந்ததியர் காலனியில் கழிவுநீர் ஓடையாக நடைபாதை மாறிஉள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையப்பொட்டல் பட்டி அருந்ததியர் காலனியில், 120-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சில தெருக்களில் சிமெண்டு தளம் போடப்பட்டது. ஆனால், வாருகால் அமைக்கப்படவில்லை. தற்போது சிமெண்டு தளம் பெயர்ந்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் வடக்கத்தியம்மன் கோவிலுக்கு தென்புறம் உள்ள மெயின் தெரு நடைபாதை கழிவுநீர் ஓடையாக மாறியுள்ளது. அதன் அருகே, குப்பைத்தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. குப்பைத்தொட்டி நிறைந்தவுடன் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியினர் கழிவுநீரை கடக்கும்போது அவதி அடைகின்றனர். துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி வருகிறது.

மேலும் இங்கு சமுதாயக்கூடம், தெருவிளக்கு, தெருக்குழாய், நடை பாதைக்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து வாருகால் மற்றும் பொதுக்கழிப்பறை, நூலகம் போன்ற வசதிகள் இல்லை.எனவே இடையப்பொட்டல் பட்டி அருந்ததியர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இடையப் பொட்டல் பட்டி பொன்னுசாமி கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில், ஒரு ஆண் குழந்தை இறந்து போனது, ஒரு பெண் குழந்தை நோயில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது. 2018-ம் ஆண்டு முதல் அடிப்படை வசதிகள் கேட்டு 4 கிராம சபை கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருந்ததியர் சமூக மக்கள் என்பதால், அரசின் நலத்திட்டங்களும் இங்கு வருவதில்லை என ஆதங்கத்துடன் கூறினார்.

Next Story