பாகூர் பகுதியில் தொடர் மழை: 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது - நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
பாகூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
பாகூர்,
வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பாகூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பகல், இரவிலும் பலத்த மழை கொட்டியது.
நேற்று முன்தினம் பகல் முழுவதும் பெய்த மழை, இரவில் சற்று நேரம் ஓய்ந்திருந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நேற்று மதியம் வரை நீடித்தது.
ஏற்கனவே பெய்த மழையால் பாகூர் கொம்யூன் பகுதியில் உள்ள 24 ஏரிகளில் 10 ஏரிகள் நிரம்பியது. தற்போது பெய்த பலத்த மழையால் மேலும் 5 ஏரிகள் நிரம்பியது. மாநிலத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான பாகூர் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நத்தமேடு வாய்க்கால், பங்காரு வாய்க்கால், சித்தேரி வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 3.6. மீட்டர் உயரமுள்ள இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 2.5 மீட்டருக்கு உயர்ந்து, கடல்போல் காட்சி அளிக்கிறது. கனமழை தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் பாகூர் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சித்தேரி அணைக்கட்டு, கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது. அதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வலைவீசி மீன் பிடித்தனர்.
பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையால் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கந்தன்பேட், காட்டுக்குப்பம், புதுநகர், கன்னியக்கோவில், மணப்பட்டு, மதி கிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, குருவிநத்தம், பாகூர் பகுதி தாழ்வான இடங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மழையால் பாகூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் மின் மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதில் 50 மீட்டருக்கு சுவர் இடிந்து விழுந்தது. இங்கு பல குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அவற்றை கிராம மக்களே வெளியேற்றினர்.
இருளஞ்சந்தையில் உள்ள இருளர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு கிராமத்தில் ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மாலைக்கு பின் தண்ணீர் குறைந்தது. இதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நல்லவாடு, பு.புதுக்குப்பம், பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
அமைச்சர் கந்தசாமி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம், சேலியமேடு, ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மழை சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாகூர் தொகுதியில் மழை பாதிப்பை பார்வையிட்ட தனவேலு எம்.எல்.ஏ., குடியிருப்பு பகுதியில் புகுந்த தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். மணவெளி தொகுதிக்கு உட்பட்ட தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம் ஆகிய கிராமங்களில் மழை சேதத்தை அனந்தராமன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு, நிவாரண உதவிகள் செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தொடர் மழையால் நெட்டப்பாக்கம் பகுதியில் ஒரு வீடும், அபிஷேகப்பாக்கம் பகுதியில் 2 வீடுகளும் சுவர் இடிந்து சேதமடைந்தது. மழை பாதிப்புகளை துணை துணை கலெக்டர் சஷ்வத் சவுரவ், பாகூர் தாசில்தார் குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story