நிலக்கோட்டை தாலுகாவில், சின்ன வெங்காயத்திற்கு விலை இருந்தும் மகசூல் இல்லை - விவசாயிகள் வேதனை
நிலக்கோட்டை தாலுகாவில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் போதிய மகசூல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி, மிளகாய்பட்டி, தோப்புப்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, செங்கட்டாம்பட்டி, சீதாபுரம், பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் எதிரொலியாக ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வெங்காய பயிர்களில் வெம்பா என்ற நோய் தாக்கப்பட்டது. இதனால் பயிர்கள் வெள்ளை நிறமாக மாறி கருகிப் போனது. இருப்பினும் ஒரு சில இடங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் மருந்துகளை தெளித்தும், நுண்ணுயிர்களை கொடுத்தும் பயிர்களை காப்பாற்றினர். இதனால் வெங்காய பயிர்கள் வளர்ந்து வந்தன.
இதற்கிடையே தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால், போதிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் வெங்காய பயிர்கள் அறுவடை செய்யும்போது, சுமார் 100 மூட்டை வரக்கூடிய இடத்தில் வெறும் 10 மூட்டை தான் கிடைத்தது. அதுவும் எதிர்பார்த்த அளவில் காய்கள் விளையவில்லை. போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒருபுறம் நன்றாக விளைந்தால் விலைவாசி இல்லாமல் போய்விடுகிறது. சில வேளைகளில் வெங்காயம் விலைவாசி இருந்தும், இயற்கையின் பேரழிவால் மகசூல் இல்லாமல் போய்விடுகிறது. தற்போது பயிர்களை விளைவிக்க செய்த செலவு கூட கைக்கு வந்து சேராது என்றனர்.
Related Tags :
Next Story