சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை


சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 3:44 PM GMT)

வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் மருத்துவமனை டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள சவுத் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் மனஷா (வயது 48). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும் சஞ்சீவ் மனஷா வெளியூருக்கு செல்லும்போது வீட்டில் வேலை செய்யும் பாரதி என்பவரிடம் சாவியை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். கடந்த மாதம் 29-ந் தேதி டாக்டர் சொந்த வேலையாக கேரளாவுக்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் சாவியை பாரதியிடம் ஒப்படைத்து சென்றுள்ளார்.

30-ந் தேதி மாலை பாரதி வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூட்டி சென்றார். நேற்று முன்தினம் காலை வீட்டை சுத்தம் செய்ய வந்த அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டார். அங்கு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. உடனடியாக பாரதி இதுகுறித்து சஞ்சீவ் மனஷாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். பீரோவில் வைத்திருந்த 5½ பவுன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இதுகுறித்து சஞ்சீவ் மனஷா நேற்று காலை சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து டாக்டரின் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் கோர்ட்டு அருகே மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் உள்ள வீட்டில் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story