கார்த்திகை தீபத்திருவிழா 2-வது நாள்: தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா


கார்த்திகை தீபத்திருவிழா 2-வது நாள்: தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
x
தினத்தந்தி 3 Dec 2019 3:30 AM IST (Updated: 2 Dec 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-வது நாளான நேற்று தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர்.

இரவு 9.30 மணி அளவில் மூ‌ஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும், வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் 2-வது நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மூ‌ஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

பின்னர் மேள தாளங்கள் முழங்க மூ‌ஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் சுற்றி வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் தொட்டில் அமைக்க பயன்படுத்திய கரும்புகளை உடைத்து அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர். இதேபோல் 7-ம் நாள் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் தீபத்திருவிழாவின் போது மகாதீபத்திற்கு பக்தர்கள் நெய் காணிக்கை வழங்குவதற்காக ஒரு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு கிலோ நெய் ரூ.250-க்கும், அரை கிலோ ரூ.150-க்கும், கால் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி ரசீது பெற்று செல்கின்றனர்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை உத்தரவின் பேரில் கோவிலில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் மூலம் கோவிலில் அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவில் கோபுர நுழைவு வாயில்கள், சன்னதி நுழைவு வாயில்கள், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள், பேகோபுரத் தெரு மற்றும் ராஜகோபுரம் முன்புறம் உள்ள பகுதிகள் உள்பட மொத்தம் 103 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

சாமி வீதி உலா வரும் மாடவீதிகளில் 11 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உற்சவ பஞ்சமூர்த்திகள் வீதி உலாவிற்காக அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாண மண்டபத்தில் 14 கண் காணிப்பு கேமராக்களும், 360 டிகிரி சுழல் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் கண் காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story