கூடலூர் ஆர்.டி.ஓ. பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து - ஆதிவாசி மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு


கூடலூர் ஆர்.டி.ஓ. பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து - ஆதிவாசி மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 4:00 AM IST (Updated: 2 Dec 2019 10:05 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் ஆர்.டி.ஓ. பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கூடலூர் அலுவலகத்துக்கு ஆதிவாசி மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர், 

கூடலூர் ஆர்.டி.ஓ.வாக கடந்த 11 மாதங்களாக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் அவர் வாணியம்பாடி ஆர்.டி.ஓ.வாக பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதை அறிந்த கூடலூர் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கடந்த மாதம் 29-ந் தேதி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ஆனந்தி, தேர்தல் பணிக்கான பயிற்சிக்கு ஆர்.டி.ஓ. வெளியூர் சென்றுள்ளதாக ஆதிவாசி மக்களிடம் தெரிவித்தார். மேலும் போலீசாரும் விரைந்து வந்து ஆதிவாசி மக்களிடம் விசாரித்தனர்.

அப்போது ஆர்.டி.ஓ.வை பணியிட மாறுதல் செய்யக்கூடாது. முதுமலையில் மாற்றுஇடம் வழங்கும் திட்டம் முழுமை பெறும் வரை கூடலூரில் பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் போலீசார் கேட்டு கொண்டதால் ஆதிவாசிமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பயிற்சி முடிந்து நேற்று அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த ஆதிவாசி மக்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் பகல் 11.30 மணிக்கு அங்கு மீண்டும் வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்றனர். அதிகளவு கூட்டம் என்பதால் அலுவலகத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்.டி.ஓ.வை சந்திக்க வந்துள்ளதாக ஆதிவாசி மக்கள் அலுவலக ஊழியர்களிடம் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை சந்தித்தனர். மேலும் கூடலூரில் இன்னும் ஒரு ஆண்டு பணியாற்ற வேண்டும். வேறு அதிகாரி வந்தால் முதுமலை மாற்று இடம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இருக்காது.

இதைக்கேட்ட ஆர்.டி.ஓ., அரசின் பணியிட மாறுதல் உத்தரவை பின்பற்றியாக வேண்டும். மாற்றுஇடம் வழங்கும் திட்டம் குறித்து ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும். இதனால் எனக்கு பின்னால் வரும் ஆர்.டி.ஓ. அதை பின்பற்றி செயல்படுவார். தங்களின் அன்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் ஆதிவாசி மக்களிடம் பேசினார்.

இருப்பினும் ஆதிவாசி மக்கள் தங்களது கோரிக்கையை மனுக்களாக எழுதி ஆர்.டி.ஓ.விடம் வழங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

முதுமலையில் பலதலைமுறைகளாக வாழும் மக்களை மாற்றுஇடம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 கட்டங்களாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். 3-வது கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

சன்னக்கொல்லி பகுதியில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர நியாயமான அதிகாரிகள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். இதனால் கூடலூர் ஆர்.டி.ஓ.வை இன்னும் ஒரு ஆண்டு பணியிட மாறுதல் அளிக்கக்கூடாது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையீட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஆதிவாசி மக்கள் 2-வது முறையாக திரண்டு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story