உள்ளாட்சி தேர்தல் விதிமுறையையொட்டி குறைகேட்பு கூட்டம் ரத்து: கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுக்களை செலுத்திய பொதுமக்கள்


உள்ளாட்சி தேர்தல் விதிமுறையையொட்டி குறைகேட்பு கூட்டம் ரத்து: கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுக்களை செலுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 2 Dec 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் விதிமுறையையொட்டி குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் பொதுமக்கள், மனுக்களை செலுத்தினார்கள்.

விழுப்புரம், 

தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுவதாகவும், இதன் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெறுவதாகவும் நேற்று காலை 10 மணியளவில் மாநில தேர்தல் ஆணையாளர் பழனிசாமி அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று காலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி அரசு சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக காலை 9 மணியளவில் ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கோரிக்கை மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அதிகாரிகள் எடுத்துக்கூறினர். அதன் பிறகு மக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுப்பதற்கு ஏதுவாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு புகார் பெட்டி வைக்க மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஏற்பாடு செய்தார்.

அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு புகார் பெட்டி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்து தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுவாக எழுதி அந்த மனுக்களை புகார் பெட்டியில் செலுத்தினார்கள். விரைவில் இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story