உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் ரத்து


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 4:59 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனு கொடுப்பதற்காக வந்த பொதுமக்கள் மனுக்களை அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திங்கட்கிழமை ஆதலால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களை அங்கு கணினியில் பதிவு செய்யும் மையத்தில் கொடுத்து பதிவு செய்து அந்த மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் அளித்தனர்.

பாதியில் ரத்து

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதிமுறைகளும் உடனே அமலுக்கு வந்தது. இந்த தகவல் அறிந்ததும் மனுக்கள் கணினியில் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. காலை 11 மணி வரை மட்டுமே மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் மனுக்கள் பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் கூட்டத்தின் அரங்குகளும் பூட்டப்பட்டன. இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மனு கொடுக்க வந்த பொதுமக்களை, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் சந்தித்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டதால் மனுக்கள் பெற முடியாது. எனவே பெட்டியில் போடுங்கள் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை போடுவதற்காக அங்கு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.


Next Story