உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 3 Dec 2019 4:30 AM IST (Updated: 2 Dec 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைதொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று காலை வெளியானது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்தநிலையில் திருச்சியில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் பலர் காலையில் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்கு வசதியாக கலெக்டர் அலுவலக பின்பக்க நுழைவு வாயில் முன்பு ஒரு பெட்டி வைக்கப்பட்டது.

கூட்டம் நடைபெறாதது குறித்து அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதனால் கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர், மனுக்களை செலுத்துவதற்காக வைக்கப்பட்ட பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டனர்.

சாலை வசதி

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சம்சுதீன் அளித்த மனுவில், அரியமங்கலம் பால்பண்ணையில் இருந்து காந்திமார்க்கெட் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பா.ம.க. நிர்வாகிகள் ஸ்ரீதர், திலீப் ஆகியோர் எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனி 5-வது தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், சாலை வசதி கோரியும், பி.எஸ். நகரில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்ற கோரியும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

திருச்சி கீழரண் சாலை வழியாக நகர பஸ்கள் இயக்கவும், காந்திமார்க்கெட் முதல் கீழரண் சாலை வரை லாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி கீழபுலிவார்ரோடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மாரியம்மன் கோவில்

சமயபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்படும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அருகே நிறுத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சமயபுரம் கோவிலுக்கு எதிர்புறம் இயங்கி வந்த பஸ் நிலையத்தை மராமத்து பணி செய்து போக்குவரத்திற்கு வழி வகை செய்ய வேண்டும். வழக்கமான பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

பெட்டியை திறந்த பின் மனுக்களை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது எனவும், பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு விட்டு செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story