தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திடீர் ரத்து - கலெக்டரிடம் மனு கொடுக்க குவிந்த மக்கள் ஏமாற்றம்


தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திடீர் ரத்து - கலெக்டரிடம் மனு கொடுக்க குவிந்த மக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 3 Dec 2019 4:15 AM IST (Updated: 3 Dec 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க குவிந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்காசி, 

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தென்காசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடத்தினார். அதுபோல் இந்த வாரமும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அதே மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன.

இந்தநிலையில் நேற்று காலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மண்டபத்திற்கு முன்பு திரண்டனர்.

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தெற்குமேடு, புளியரை, வல்லம், கொட்டாகுளம், வடகரை, நெடுவயல், குமந்தாபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ், மாநில துணைச் செயலாளர் துரை அரசு, மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மண்டபத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தென்காசி கீழ வாலியன் பொத்தை பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள், தங்களை குற்றாலத்தில் தொழில் செய்யவிடாமல் போலீசார் தடுப்பதாக கூறி மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் -கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் திட்டமிடப்பட்ட பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர். கடையநல்லூர் அருகே உள்ள கள்ளம்புளி பகுதி பொதுமக்கள், பாப்பாங்கால் 13-ம் எண் மடை கால்வாயை சீரமைக்கக்கோரி மனு கொடுக்க வந்தனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அவர்கள் வெளியில் செல்லாமல் மனு கொடுத்து விட்டு தான் செல்வோம் என்று அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து மண்டபத்தின் வாசலில் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டது. அதில் மனுக்களை போடுமாறு அதிகாரிகள் கூறினர். அதன்படி பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். இதையொட்டி தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிரு‌‌ஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story