பரமத்தி வேலூர் அருகே ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை


பரமத்தி வேலூர் அருகே ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2019 4:45 AM IST (Updated: 3 Dec 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி சாயக்காட்டைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). ரிக் வண்டி உரிமையாளர். இவரது மகள் சவுமியா நேற்று அதிகாலை மோகனின் சகோதரர் அன்பழகனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். பின்னர் அவர் நான், தந்தை மோகன் மற்றும் தாய் நிர்மலா (47) ஆகிய மூவரும் வி‌‌ஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகன் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஏற்கனவே மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இறந்து போனது தெரியவந்தது. மேலும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சவுமியாவை (21) மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

3 பேர் சாவு

பின்னர் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் இறந்துபோன மோகன் மற்றும் நிர்மலாவின் உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஈரோட்டில் சிகிச்சை பெற்று வந்த சவுமியா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 3 ஆனது. இறந்து போன சவுமியா கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் தொல்லை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரிக் வண்டி உரிமையாளர் மோகனுக்கு அதிகளவில் கடன் தொல்லை இருந்ததும், இதன் காரணமாக அவர்கள் குடும்பத்தோடு வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிக் வண்டி உரிமையாளருக்கு நவீன்குமார் (24) என்ற மகன் உள்ளார். அவர் ஆந்திராவில் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story