வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் - தீயணைப்பு அதிகாரி தகவல்
வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க சிறப்பு மீட்பு கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள சிறப்பு மீட்பு கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகள், மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்ற அனைத்து மீட்பு பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு மீட்பு பணி நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
இதனையொட்டி தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு மீட்பு கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் மின் கம்பத்தின் அருகில் செல்லவோ, அறுந்த மின் கம்பிகளை தொடவோ கூடாது. ஈரமான சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
தெரு மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். கண்மாய், மற்றும் ஓடும் நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்கவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது.
வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியிருந்தால் தேவையான பொருட்களுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் அவசர அழைப்பிற்கு 101, 108 மற்றும் 9445086230, 9445086231, 9498254642 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சாமிராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story