புனே தாபோடியில் அதிர்ச்சி சம்பவம்: மீட்பு பணியின் போது குழிக்குள் விழுந்த தீயணைப்பு வீரர் பலி
புனே தாபோடியில் மீட்பு பணியின்போது குழிக்குள் விழுந்த தீயணைப்பு படை வீரர் பலியானார். குழிக்குள் சிக்கியுள்ள தொழிலாளியை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது.
புனே,
புனே மாவட்டம் பிம்பிரி-சிஞ்ச்வாட் தாபோடி பகுதியில் புகேவாடி மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் நாகேஷ்(வயது22) என்ற தொழிலாளி ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணியின்போது தோண்டப்பட்டு இருந்த 18 அடி ஆழ குழியில் நாகேஷ் தவறி விழுந்துவிட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகளான சீதாராம், ஈஸ்வர் ஆகியோர் நாகேசை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மிகவும் குறுகலான அந்த குழிக்குள் அவர்களும் தவறி விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழிக்குள் விழுந்த 3 தொழிலாளிகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், துரதிருஷ்டவசமாக மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 பேர் குழிக்குள் தவறி விழுந்தனர்.
இதுபற்றி தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயணைப்பு படையினர் தவறி விழுந்த குழி அருகே பொக்லைன் எந்திரம் மூலம் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினர். பின்னர் அந்த பள்ளத்தின் பக்கவாட்டில் துளையிட்டு தீயணைப்பு வீரர்கள் விழுந்த குழியுடன் இணைத்தனர்.
பின்னர் அந்த துளையின் மூலமாக 3 தீயணைப்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் சீதாராம், ஈஸ்வர் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்திருந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தீயணைப்பு படை வீரர் விஷால் ஜாதவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளி நாகேசை மீட்கும் பணியில் மட்டும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்பதற்கான முயற்சி தீவிரமாக நடந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story