நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மும்பை காட்கோபரை சேர்ந்தவர் விகாஸ்(வயது31). இவரது மனைவி வீட்டு வேலை செய்து வந்தார். விகாசுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியிடம் விகாஸ் அவரது நடத்தையை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தார்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் கடும் ஆத்திரம் அடைந்த விகாஸ் கயிற்றினால் மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் மூச்சுத்திணறி அவரது மனைவி மயங்கி விழுந்தார்.
இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதிய விகாஸ் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இதற்கிடையே அங்கு வந்த பக்கத்து வீட்டினர் மயங்கிய நிலையில் கிடந்த விகாசின் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விகாசை கைது செய்தனர். மேலும் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதில், மனைவியை கொல்ல முயன்ற குற்றத்துக்காக விகாசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story