உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து கலெக்டர் உள்பட அரசு அலுவலர்களிடம் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்குவார்கள்.
இந்த நிலையில் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் காலை 9 மணியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வர தொடங்கினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் மக்கள் கொண்டு வந்த மனுக்களை பெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்விட்டு சென்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறும் வரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் போன்றவை நடைபெறாது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story