புதுச்சேரி மீனவர்கள் வலையில், செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டின் எரிபொருள் டேங்க் சிக்கியது
புதுச்சேரி மீனவர்கள் வலையில் செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டின் எரிபொருள் டேங்க் சிக்கியது.
புதுச்சேரி,
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிவசங்கர், நவீன் உள்பட 4 பேர் நேற்று அதிகாலை விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். புதுச்சேரியில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது வலையில் இரும்பினால் ஆன உருளை வடிவம் கொண்ட மர்ம பொருள் ஒன்று சிக்கியது. உடனே அவர்கள் அந்த பொருளை இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இது குறித்து ஊரில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 8 மீனவர்கள் கரையில் இருந்து 2 படகுகளில் புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மர்ம பொருளை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அது ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது மட்டும் தெரியவந்தது. உடனே அவர்கள் அதனை மீட்டு வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் வைத்திருந்தனர்.
இதற்கிடையே வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் ராக்கெட்டில் உதிரிபாகம் விழுந்து கிடப்பதாக புதுவை முழுவதும் தகவல் பரவியது. உடனே பொதுமக்களும், புதுவைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனை காண வந்த சிறுவர்கள் சிலர் அதன் மீது ஏறி விளையாடினர். சிலர் அதன் அருகில் நின்று செல்பி எடுத்தனர்.
பின்னர் இது குறித்து புதுச்சேரி தாசில்தாருக்கும், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும், செயற்கைகோளை விண்ணுக்கு எடுத்து செல்லும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உந்துசக்தி மோட்டார் மற்றும் எரிபொருள் டேங்க் என்பதும் தெரியவந்தது.
இதில் பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல்-1 22.3.2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் டேங்க் 13.5 மீட்டர் நீளம் உள்ளது. 1,600 கிலோ எடை கொண்டது, சுமார் 12.4 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது தெரியவந்தது. அதில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை.
உடனே இது குறித்து தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த துறையில் உள்ள விஞ்ஞானிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது இது இஸ்ரோவுக்கு சொந்தமானது என்பதும், மேலும் கடந்த 27-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.- சி47 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் டேங்க்கில் ஒன்றாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர்கள் இஸ்ரோவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) புதுவை வந்து ஆய்வு மேற்கொள்ளலாம் என தெரிகிறது. அந்த எரிபொருள் டேங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story