மாவட்டத்தில் பரவலாக மழை: சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு வலசக்கல்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு


மாவட்டத்தில் பரவலாக மழை: சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு வலசக்கல்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 10:26 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வீரகனூர் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வலசக்கல்பட்டி ஏரியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்தது. தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியில் சுவேத நதி செல்கிறது. வீரகனூரை ஒட்டியுள்ள பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீரகனூர் வழியே செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுவேத நதியின் குறுக்கே கட்டப்பட்ட வீரகனூர் தடுப்பணை, லத்துவாடி தடுப்பணை ஆகியவை நிரம்பி வழிந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

சுவேத நதி, வீரகனூர் ஏரி வாய்க்கால் மூலம் நல்லூர், சொக்கனூர், லத்துவாடி, வெள்ளையூர், பகடப்பாடி ஆகிய ஏரிகளுக்கு நீர்செல்லும். இதனால் ஏரிகள் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சுவேத நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுவேத நதி பாலத்தில் நின்று பொதுமக்கள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் மலர் தூவி வழிபட்டனர். வீரகனூர் ஏரி நிரம்பியவுடன் கிடா வெட்டுவதாக ஏரிப்பாசன விவசாயிகள் தெரிவித்தனர்.

வலசக்கல்பட்டி ஏரி

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட வலசக்கல்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வலசக்கல்பட்டி ஏரிக்கு மலைப்பகுதியான மால்பள்ளி மற்றும் பச்சை மலைப்பகுதியில் இருந்து மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏரி நிரம்பியது.

நேற்று மழை காரணமாக ஏரியில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியே சென்றது. அதனால் அதையொட்டி கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் ஒரு இடத்தில் தரைமட்டம் உடைந்து தண்ணீர் கொப்பளித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலமுருகன், கவுதமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அங்கு சென்று ஏரி, தடுப்பணை மற்றும் தண்ணீர் கொப்பளித்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி எந்த நிலையில் உள்ளது? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு வருமா? என்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் ராமன் கூறும்போது, தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் தரைமட்டம் சேதம் அடைந்துள்ளது. இது உடனே சரி செய்யப்படும். தற்போது மழை பெய்வதால் சுவேத நதியின் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள், என்றார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வீரகனூர்-45, தம்மம்பட்டி-40, கெங்கவல்லி-40 எடப்பாடி-20, மேட்டூர்-17.8 ஆத்தூர்-11.4, ஏற்காடு-11, வாழப்பாடி-6, பி.என்.பாளையம்-8, சேலம்-8.6, ஆணைமடுவு-8, கரியக்கோவில்-5, காடையாம்பட்டி-4.2, ஓமலூர்-3.4, சங்ககிரி-5.


Next Story