விழுப்புரம் அருகே, சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே, சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 6:38 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கூட்டுசாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தை சற்று முன்னதாக நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் அந்த வாகனத்துக்குள் 20 அட்டைப்பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இந்த மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு கடத்தி வந்ததும் போலீசாரை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story