கடலூரில், வீட்டின் முன்பு தேங்கிய மழைநீரில் மூழ்கி தொழிலாளி சாவு - போலீசார் விசாரணை


கடலூரில், வீட்டின் முன்பு தேங்கிய மழைநீரில் மூழ்கி தொழிலாளி சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 4:21 PM GMT)

கடலூரில் வீட்டின் முன்பு தேங்கிய மழைநீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் தற்போது பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள், அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரில் உள்ள வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜ் (வயது 57) மற்றும் அப்பகுதி மக்கள், அங்குள்ள தனியார் பள்ளியில் இருந்த முகாமிற்கு சென்று தங்கினர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை முகாமில் இருந்து தனது வீட்டுக்கு ராஜ் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் முகாமிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ், வீட்டின் முன்பு தேங்கியிருந்த மழைநீரில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜ் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ் வீட்டின் முன்பு அதிகளவு மழைநீர் தேங்கியிருந்ததாகவும், அதுபற்றி அறியாத அவர் வீட்டுக்கு வந்த போது தேங்கி இருந்த மழைநீரின் வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாய் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றதால், அதன் உள்ளே எதிர்பாரதவிதமாக தடுக்கி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story