வந்தவாசி அருகே, ஏரி மதகு உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் சேதம் - கலெக்டர் பார்வையிட்டார்
வந்தவாசி அருகே ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறியதால் பயிர்கள் சேதம் அடைந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பயிர்களையும், ஏரியையும் பார்வையிட்டனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மீசநல்லூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 260 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இதன் மூலம் 150 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரியில் 60 சதவீதம் நீர் நிரம்பி இருந்தது.
இந்த ஏரியின் மதகு கடந்த 4 ஆண்டுகளாக சேதம் அடைந்து இருந்தது. மழைக்காலங்களில் நீர் நிரம்பும் போது மதகு பகுதியில் நீர் கசியும் நிலை ஏற்பட்டது. அந்த சமயங்களில் பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை போட்டு நீர் வெளியேறுவதை தடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 5 மணியளவி்ல் ஏரியின் மதகு முழுவதுமாக உடைந்தது. இதனால் ஏரியிலிருந்து நீர் வெளியேறத் தொடங்கியது. இதனை அறிந்த பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
வெளியேறிய நீர் ஏரியின் கீழ்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வேர்க்கடலை, வாழை ஆகிய விளைநிலங்களில் பாய்ந்தது. இதனால் 100 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது.
மதகு உடைந்த தகவல் அறிந்த அலுவலர்கள் விரைந்து சென்று மணல் மூட்டைகளை ஏரியின் மதகு பகுதியில் போட்டு நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இருந்து 40 சதவீதம் நீர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மீசநல்லூர் சென்று ஏரியையும், உடைந்த மதகு பகுதி, அங்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். மணல் மூட்டைகள் அடுக்கும் பணியை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதுடன் நீரில் மூழ்கிய விளை நிலங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் கூறினார்.
அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, செய்யாறு உதவி கலெக்டர் விமலா, வந்தவாசி தாசில்தார் வாசுகி, சமூக நல பாதுகாப்பு தாசில்தார் நரேந்திரன், தெள்ளார் ஒன்றிய ஆணையாளர் பா.காந்திமதி, பொதுப் பணித்துறையினர், வேளாண்மைத்துறையினர் உடன் இருந்தனர்.
மேலும் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் மீசநல்லூர் கிராமத்திற்கு சென்று ஏரி, உடைந்த மதகு பகுதி, சேதம் அடைந்த விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது தெள்ளார் ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், ஒன்றிய பொறியாளர் பிரிவு அமைப்பாளர் எஸ்.பிரபு, வந்தவாசி நகர செயலாளர் கோட்டை அ.பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story